வேத மந்திரம் முழங்க மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
மதுரை: மதுரை சித்திரை திருவிழா வேத மந்திரம் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. முன்னதாக, மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதியில் வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்தனர். சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சரியாக இன்று பகல் 11.45 மணிக்கு சி்த்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி சிம்மவாகனத்திலும் பவனி வருகின்றனர். முக்கிய நிகழ்வாக மே, 2ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மே, 5ல் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றாலும் மிகவும் பிரசித்தி பெற்றவை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் தான். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றதுமே நினைவிற்கு வருவது சித்திரை திருவிழா தான். இது சைவ - வைணவ ஒற்றுமையை உணர்த்தும் விழாவாகும். இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே மாதம் 8 ம் தேதி வரை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 16 நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில் முக்கிய நிகழ்வுகள்..
ஏப்ரல் 23 - சித்திரை திருவிழா கொடியேற்றம் - கற்பக விருக்ஷம், சிம்ம வாகனம்
ஏப்ரல் 24 - பூத வாகனம், அன்ன வாகனம்
ஏப்ரல் 25 - கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 26 - தங்க பல்லக்கு
ஏப்ரல் 27 - வேடர் பறி லீலை - தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 28 - சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை - ரிஷப வாகனம்
ஏப்ரல் 29 - நந்திகேஸ்வரர், யாளி வாகனம்
ஏப்ரல் 30 - மீனாட்சி பட்டாபிஷேகம் - வெள்ளி சிம்மாசன உலா
மே 01 - மீனாட்சி திக்விஜயம் - இந்திர விமான உலா
மே 02 - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - யானை வாகனம், புஷ்ப பல்லக்கு
மே 03 - தேரோட்டம் - சப்தாவர்ண சப்பரம்
மே 04 - தீர்த்தவாரி - வெள்ளி விருச்சபை சேவை
மே 04 - கள்ளழகர் எதிர்சேவை
மே 05 - கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் - 1000 பொன்சப்பரம்
மே 06 - மண்டூக மகரிஷி மோட்சம் தருதல்
மே 06 - இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி
மே 07 - கள்ளழகர் மோகினி அவதார திருக்கோலம் - புஷ்ப பல்லக்கு
மே 08 - கள்ளழகர் திருமலை எழுந்தருளல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று துவங்கி மே, 4 வரை நடக்கிறது. தினமும் காலை, மாலை சித்திரை வீதிகளில் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். மே 2ல், கோவிலின் வடக்காடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் காலை, 8:30 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. நேரில் காண விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, 200 ரூபாய்,- 500 ரூபாய்க்கான கட்டணச்சீட்டுகள், தெற்கு கோபுரம் வழியாக கட்டணமில்லா தரிசன முறையில், முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். ஹிந்து சமய அறநிலையத்துறை இணையதளம் hrce.tn.gov.in, கோவில் இணையதளம் maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகியவற்றில் இதற்கான கட்டண முன்பதிவு நேற்று துவங்கியது. நாளை இரவு, 9:00 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
கள்ளழகர்: கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா மே, 1ல் தொடங்குகிறது. மே, 3 இரவு 7:00 மணிக்கு கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்படுகிறார். மே 4 அதிகாலை மதுரை மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. மே 5ல், வைகை ஆற்றில் கள்ளழகர் காலை, 5:45 மணிக்கு மேல், 6-:12 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். மே 6- தேனுார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார அலங்காரம் நடக்கிறது. மே 7 இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். மே 8- காலை கள்ளழகர் அழகர் மலை நோக்கி புறப்பட்டு, மே 9 காலை, 10:32 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். மதுரையில் நடைபெறும் பிரமாண்ட சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை செய்து வருகிறது.