ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா கோலாகலம் : பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை வழிபட்டனர்.
நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். நேற்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இரவு 11.27 மணிக்கு குருபெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆபத்சகாயேஸ்வரர் மூலஸ்தான பிரகாரத்தில் உள்ள குருபகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 11.27 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியானார். அப்போது குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கபட்டு, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து ராஜ அலங்காரத்தில் அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.