சிவபுரம் சிவகுருநாத சுவாமி கோவிலில் 80 ஆண்டுக்கு பிறகு கொடிமரம் பிரதிஷ்டை
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற சிங்காரவல்லி சமேத சிவகுருநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரைத் தலங்களில் 67-வது சிவத்தலமாகும். இப்பகுதியின் பூமிக்கடியில் எண்ணற்ற சிவலிங்கங்கள் புதைந்துள்ளதாக ஐதீகம் உள்ளது. இதனால், திருஞானசம்பந்தர் இத்தலத்தின் மீது நடந்து செல்ல அஞ்சி, அங்கப்பிரதட்சணம் செய்து ஊரின் எல்லைக்கு அப்பால் சென்று பதிகம் பாடியதாக வரலாறு கூறுகிறது. மேலும், சோழப் பேரரசின் செம்பியன் மாதேவி, குந்தவை நாச்சியார் போன்றவர்களால் இக்கோவிலுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலில், கடந்த பல ஆண்டுகளாகக் கொடிமரம் இல்லாமல், அது இருந்ததற்கான அடையாளம் மட்டுமே இருந்து வந்தது. கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய கிராம மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், உபயதாரர் பிரேம்குமார் என்பவரால், சுமார் 21 அடி உயரமுள்ள வேங்கை மரத்தினால் செய்யப்பட்ட புதிய கொடிமரம் நேற்று கோவிலுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கொடிமரத்திற்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு முறைப்படி நிறுவப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, “ஓம் நமசிவாய” என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மயிலாடுதுறை துணை ஆணையர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுந்தர்ராஜன், நாச்சியார்கோவில் சரக ஆய்வாளர் சுதாராமமூர்த்தி, மயிலாடுதுறை மண்டல ஸ்தபதி ஜெகதீசன் மற்றும் சிவபுரம் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து சிவபுரத்தைச் சேர்ந்த நாராயணன் கூறும்போது, "புகழ்பெற்ற சோழர் காலத்து நடராஜர் சிலை அமைந்த தலம் இதுவாகும். இக்கோவிலில் கொடிமரம் இல்லாத நிலை நீடித்து வந்த சூழலில், தற்போது 80 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கோவில் ஆகம விதிகளின்படி முழுமை பெற்றுள்ளது என்றார்.