மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழா துவங்கியது
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற மே. 2ம் தேதியும், தேரோட்டம் மே.3ம் தேதியும் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.விழா நாட்களின் போது சுவாமிகள் அன்னம், சிம்மம்,காமதேனும், ரிஷபம்,குதிரை,யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் 4 ரத வீதிகளிலும் வீதிவுலா நடைபெறும். கோவில் முன்பாக வைகை ஆற்றில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.இந்த வருட சித்திரை திருவிழாவிற்காக இன்று காலை 8 மணியிலிருந்து 8:30 மணிக்குள் சோமநாதர் சன்னதிக்கு முன்பாக உள்ள கொடிமரத்தில் ராஜேஷ், குமார், பரத்வாஜ் உள்ளிட்ட அர்ச்சகர்கள் பலர் கொடியேற்றத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் பிரியாவிடையுடனும் கொடி மரத்திற்கு முன்பாக எழுந்தருளினர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.கொடியேற்ற விழாவில் மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம்,தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்பட மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.முக்கிய நிகழ்ச்சிளான திருக்கல்யாணம் வருகிற மே.2ம் தேதியும், தேரோட்டம் மே.3ம் தேதியும்,விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா மே.5ம் தேதியும் நடைபெற உள்ளது.