திருப்பாச்சேத்தியில் மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுப்பு
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாயில் பண்டைய கால மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாயில் தர்மபுரி அரசு கலை கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகரன், ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோ, தொல்லியல் ஆய்வு மாணவர்கள் சீனன், இளந்திரையன் உள்ளிட்ட குழுவினர் சமீப காலமாக கள ஆய்வு செய்து வருகின்றனர். இதில் கண்மாய் கரையில் உள்ள காராளுருடைய அய்யனார் கோவில் அருகே சேதமடைந்த கற்சிலையை ஆய்வு செய்து காரைக்குடி அழகப்பா பல்கலை கழக முன்னாள் பேராசிரியர் காளைராஜனுக்கு தகவல் கொடுத்தனர். சிலையை ஆய்வு செய்த காளைராஜன் கூறுகையில்: பண்டைய கால மீனாட்சி அம்மன் சிலை இது. சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது போர் நடைபெற்ற காலங்களாக இருக்க கூடும். இப்பகுதியில் தொல்லியல் மேடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. உறை கிணறு, கல்வெட்டு உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன, என்றார். எனவே தொல்லியல் துறையினர் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.