ராமேஸ்வரம் கோயிலில் தகவல் பலகை இல்லை : பக்தர்கள் குழப்பம்
ADDED :1008 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் புனித நீராடிய பின் சுவாமி தரிசனம் செல்ல வழிகாட்டு தகவல் பலகை இல்லாததால், குழப்பம் அடைகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள 22 தீர்த்தங்களை புனித நீராடுவார்கள். இவர்கள் கோயில் வடக்கு வாசல் வழியாக வந்து 22 தீர்த்தங்களை அடுத்தடுத்து நீராடிய பின், தெற்கு வாசலில் வெளியேறுவர். அப்போது, அங்குள்ள அறையில் உடை மாற்றிக் கொண்ட பின், பக்தர்கள் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செல்வது வழக்கம். ஆனால் தரிசனத்திற்கு செல்ல வழிகாட்டு தகவல் பலகை இல்லாமல், பக்தர்கள் தெற்கு ரதவீதியில் வெளியேறியும், சிலர் கோயில் 3ம் பிரகாரத்தில் சுற்றி வந்து ஏமாற்றம் அடைகின்றனர். எனவே நீராடி வரும் பக்தர்களுக்கு வசதியாக இங்கு தகவல் பலகை வைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.