உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி பட்டாபிஷேக ராமர் கோயிலில் தேரோட்டம்

திருப்புல்லாணி பட்டாபிஷேக ராமர் கோயிலில் தேரோட்டம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்குள் தனி சன்னதியாக பட்டாபிஷேக ராமர் கோயில் அமைந்துள்ளது. பங்குனியில் ஆதி ஜெகநாத பெருமாளுக்கு பிரம்மோற்ஸவமும், சித்திரையில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவமும் நடப்பது வழக்கம். சித்திரை விழாவை முன்னிட்டு பட்டாபிஷேக ராமர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கு ஏப்., 26 அன்று காலை 10:30 மணியளவில் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில், கொடி பட்டம் ஏற்றப்பட்டது. சீதா பிராட்டியார், ராமபிரான், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன், அனுமன் உள்ளிட்ட உற்ஸவமூர்த்திகளுக்கு தொடர்ந்து பத்து நாட்களும் விசேஷத் திருமஞ்சனமும், சாற்று முறை கோஷ்டி பாராயணமும் நடந்தது.

தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு அலங்கார மலர் வாகனங்களில் உற்ஸவ மூர்த்தி நான்கு ரத வீதிகளிலும் புறப்பாடு நடந்தது. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு காலை 10:00 மணியளவில் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 10:30 மணியளவில் புறப்பாடாகியது. 60 அடி உயரமுள்ள பெரிய தேரில் உற்ஸவர் சீதா பிராட்டியார், ராமபிரான், லட்சுமணர் வைக்கப்பட்டு, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். ஜெய் ஸ்ரீ ராம் கோவிந்தா கோஷம் முழங்கினர். முற்பகல் 12:15 மணியளவில் தேர் இருப்புநிலைக்கு வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் மீது காய்கனிகள் வீசப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நாளை காலை 9:00 மணிக்கு ஆதி ஜெகநாத பெருமாள், பட்டாபிஷேக ராமர் அனுமார் மற்றும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி உற்ஸவத்தில் பங்கேற்கின்றனர். இரவில் சந்திர பிரபை வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது. மே.,7 அன்று உற்ஸவ சாந்தியுடன் சைத்ரோத்ஸவ விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !