உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எழுமலையில் சித்திரை திருவிழா ; மருமகன் சுப்பிரமணியருக்கு சீர் வழங்கிய மாமா பெருமாள்

எழுமலையில் சித்திரை திருவிழா ; மருமகன் சுப்பிரமணியருக்கு சீர் வழங்கிய மாமா பெருமாள்

எழுமலை: எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் ஆலய சித்திரை திருவிழாவில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு திருவேங்கடப்பெருமாள் சீர் வழங்கும் நிகழ்வும், எதிர்சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தமிழகத்தில் சைவமும் வைணவமும் பாகுபாடு இல்லாமல் இணைந்து வழிபாடு நடத்தும் விதமாக பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக எழுமலையில் மாதாந்திர சுப்பிரமணியர் ஆலய சித்திரை திருவிழாவில் திருவேங்கடபெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி மூன்று நாள் திருவிழாவாக நடக்கிறது. மே 5ல் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் புறப்பட்டு எழுமலை மகாராஜகணபதி கோயில் அருகே மண்டகப்படியில் தங்கியிருந்தனர். திருவேங்கடப்பெருமாளும் கோயிலில் இருந்து புறப்பட்டு அதே பகுதியில் மண்டகப்படியில் தங்கி ஒருநாள் முழுவதும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்று காலை 9.30 மணியளவில் பெருமாளிடம் இருந்து மாலை மரியாதை சுப்பிரமணியருக்கு வழங்கப்பட்ட பின் புறப்பாடு நடைபெற்றது. சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், பெருமாள் ஆஞ்சநேயர் வாகனத்திலும் புறப்பாடாகி எழுமலை பெரிய கண்மாய் பகுதியில் ராஜகணபதி கோயில் அருகில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணியரும், பெருமாளும் தங்கள் கோயில்களுக்கு சென்றனர். ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !