ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்க மன்னார்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு இன்று காலை கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. பின்னர் ஆண்டாள் பச்சை பட்டு உடுத்தி சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்திலும் எழுந்திருளினர். காலை 9:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்ட ஆண்டாள், ரெங்க மன்னார் மாடவீதி மற்றும் முக்கிய வீதிகள் சுற்றி ஆத்துக்கடை சந்திப்பு வந்தடைந்தனர். அங்கு காலை 10:20 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஆண்டாளை, ரங்க மன்னார் சுற்றிவரும் வையாளி சேவை வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பட்டர்கள் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.