உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் கள்ளழகர் பூ பல்லக்கில் கோயிலுக்கு திரும்பினார்

பரமக்குடியில் கள்ளழகர் பூ பல்லக்கில் கோயிலுக்கு திரும்பினார்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் கோயிலுக்கு திரும்பினார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா மதுரை அழகர் கோவிலுக்கு இணையாக நடந்து வருகிறது. ஏப்., 30 ல் காப்பு கட்டப்பட்டு மே 3 வரை பெருமாள் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தார். மே 4 அன்று இரவு 2:00 மணிக்கு மேல் கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளி, அதிகாலை 3:50 மணிக்கு கொட்டும் மழைக்கு மத்தியில் ஆற்றில் இறங்கினார். பின்னர் குதிரை வாகனத்தில் தல்லாகுளத்தில் இருந்து பக்தர்கள் மஞ்சள் நீர் பீச்சியடிக்க, இரவு வண்டியூர் பெருமாள் கோயிலை அடைந்தார். மறுநாள் சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷி சாப விமோசனம், தொடர்ந்து விடிய விடிய தசாவதார சேவையில் அருள் பாலித்தார். பின்னர் கருட வாகனம், ராஜாங்க திருக்கோலத்தில் வைகையில் வலம் வந்தார். நேற்று காலை 8:00 மணிக்கு மீண்டும் பெருமாள் கோடாரி கொண்டையிட்டு கத்தி, வளரி, ஈட்டி வாள், தடி ஏந்தி பூ பல்லக்கில் நகர்வலம் வந்தார். அப்போது பொதுமக்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். வழி நெடுகிலும் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பெருமாள் கோயில் முன்பு பல்லக்கில் அங்கும் இங்கும் ஆடி அசைந்த கள்ளழகர், கருப்பணசாமி இடம் மீண்டும் உத்தரவு பெற்று திருக்கோயிலில் சேர்க்கையானார். இரவு கண்ணாடி சேவையில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இன்று உற்சவ சாந்தி நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !