உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருள்வாக்கு கூறிய காளையால் 20 ஆண்டுக்கு பின் நடந்த விழா

அருள்வாக்கு கூறிய காளையால் 20 ஆண்டுக்கு பின் நடந்த விழா

வேலுார்: வேலுார் அருகே, காளை மாடு மற்றும் பூசாரி ஒரே சமயத்தில் அருள்வாக்கு கூறியதால், 20 ஆண்டுகளுக்கு பிறகு, கோவில் திருவிழா நடந்தது.

வேலுார் மாவட்டம் அணைக்கட்டு அருகே, 84 மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் ஒடுகத்துாரை அடுத்த பீஞ்சமந்தை மலை பஞ்.,ல், 47 குக்கிராமங்கள் உள்ளன. இதில் கட்டியாபட்டு கிராமத்தில் சுயம்பு பெருமாள் புற்று கோவில் உள்ளது. இங்கு திருவிழா நடத்த, கோவில் பூசாரிக்கும், ஊரில் உள்ள ஏதாவது ஒரு காளை மாட்டுக்கும், ஒரே நேரத்தில் அருள் வந்தால் மட்டுமே திருவிழா நடத்தப்படும். கடந்த, 2003ல் விழா நடந்தது. அதன்பிறகு அருள்வாக்கு கிடைக்காததால் விழா நடக்கவில்லை. இந்நிலையில், 48 நாட்களுக்கு முன், கோவில் பூசாரி அருள்வாக்கு கூறியும், கிராமத்தை சேர்ந்த ஒரு காளைமாடு தலையை அசைத்ததும், ஒரே நேரத்தில் நடந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து விழாவுக்கு ஏற்பாடு செய்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், பெருமாள் கோவிலில் விழா விமரிசையாக நடந்தது. அருள் வந்த காளையை அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். கோவில் புற்றுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பொங்கல் வைத்து படையிலிட்டு, பூஜை செய்தனர். இதில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ௨௦ ஆண்டுகளுக்குப் பிறகு விழா நடந்ததால், மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !