உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவம்; மே 24ல் கொடியேற்றம்

நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவம்; மே 24ல் கொடியேற்றம்

நயினார்கோவில்: ‌ ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பிரசித்தி பெற்ற நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா நடக்க உள்ளது.

மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்புகள் பெற்ற நயினார்கோவிலில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் தோஷ நிவர்த்தி உள்ளிட்ட பிரார்த்தனைகளை நிறைவேற்ற வருகை தருவர். மேலும் குழந்தை வரம் வேண்டுவோர் பிறந்த குழந்தையை கோயிலில் விட்டு ஏலம் எடுக்கும் வழக்கம் உள்ளது. இச்சிறப்புகள் வாய்ந்த கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா மே 24 காலை 6:00 - 7:30 மணிக்குள் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அருள் பாலிக்கிறார். தொடர்ந்து தினமும் காலை, இரவு சுவாமி, அம்பாள் இந்திர விமானம், கேடகம், நந்தீஸ்வரன், ஹம்ச வாகனம், பூத, சிம்ம, யானை, கைலாச வாகனங்களில் வீதி வலம் வருவர். முக்கிய விழாக்களாக மே 29 காலை சமணர்களுக்கு முக்தி கொடுத்தல், திருஞான சம்பந்தருக்கு திருமுலை பால் ஊட்டல் நிகழ்ச்சி நடக்கிறது. மே 31 காலை ஸ்ரீ நடராஜர் புறப்பாடு திருமுறி பட்டயம் வாசித்தல், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி திரு ஊடல் தீர்த்தல் நிகழ்வு நடக்கிறது. ஜூன் 1 காலை 9:00 - 9:35 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலை தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் வைரவ சுப்ரமணியன் ஏற்பாடுகளை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !