தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழா துவங்கியது
தளவாய்புரம்: சேத்துார் அடுத்த தேவதானம் தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று காலை பரம்பரை அறங்காவலர் துறை ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். கொடி மரத்திற்கு மேல தாளங்கள் முழங்க பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது. தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சேத்துார், கோவிலுார், முகவூர், தளவாய்புரம், ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. 10 நாள் திருவிழாவில் தினமும் சுவாமி கேடயம், கற்பகதரு, பூத, வெள்ளி வாகனங்களிலும் அம்பாள் கிளி, காமதேனு, சிம்ம வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். மாலை ஆன்மீக நிகழ்ச்சிகள், சொற்பொழிவு இசை நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியாக மே 30ல் திருக்கல்யாணம், ஜூன் 1ல் தேர் திருவிழா நடைபெறும். செயல் அலுவலர் கலா ராணி, அறங்காவலர் துரை ரத்னகுமார் முன்னிலையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.