கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா
கொடைக்கானல்; கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா நடந்தது. கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் ஆன்மீக தலமாக விளங்கும் குறிஞ்சியாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் மலர் வழிபாட்டு விழா நடக்கும். இதில் முன் மண்டபங்கள் பல்வேறு வகையான மலர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு முருகன் சிறப்பு அலங்காரத்தில் பூக்களுடன் காட்சியளித்தார். முன்னதாக சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவில் முன் மண்டபம், முருகனின் சிறப்பை குறிக்கும் மயில், வேல் உள்ளிட்டவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. கோடை இன்டர்நேஷனல் விடுதி நிர்வாக இயக்குனர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா கலந்து கொண்டனர். மலர் வழிபாட்டுக்கான மலர்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோடை இன்டர்நேஷனல் விடுதி செய்திருந்தது.