திருப்பரங்குன்றம் கோயில் ஆனி ஊஞ்சல் திருவிழா ஜூன் 24ல் துவக்கம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா ஜூன் 24 ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டுடன் துவங்குகிறது. அன்று உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை முடித்து காப்பு கட்டப்படும். இரவு 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்படத்தை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருள்வர். கோயில் ஓதுவார்களால் தேவாரம் பாடப்படும். சுவாமி 30 நிமிடங்கள் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடக்கும். ஜூலை 2வரை இந்த ஊஞ்சல் உற்சவம் நடக்கும். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக ஜூலை 3ல் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஷ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மா, பலா, வாழை முக்கனிகள் படைக்கப்பட்டு பூஜை நடக்கும்.