ஆடி திருவிழாவிற்காக மானாமதுரையில் கலயங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்
மானாமதுரை: தமிழகத்தில் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாவிற்காக மானாமதுரையில் கலயங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாகமாக நடைபெற்று வருகிறது.மானாமதுரையில் சுமார் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்கள்,வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில் வர இருக்கின்ற ஆடி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் திருவிழாக்களின் போது பக்தர்களுக்கு கூல் காய்ச்சிசி ஊற்றுவது வழக்கம்.அதேபோன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் வார வழிபாட்டு மன்றங்களில் கஞ்சிக்கலய ஊர்வலங்கள் நடத்தப்படுவதும் வழக்கமாக உள்ளது.இதற்காக தற்போது மானாமதுரையில் கலயங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், ஆடி மாதம் பிறந்த உடன் அம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாவிற்காக கடந்த மாதமே ஏராளமான மண்பாண்ட பொருட்கள் விற்பனையாளர்கள் இங்கு வந்து கலயங்கள் தயாரிப்பதற்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். அதற்காக கடந்த இரண்டு மாதங்களாக கலயங்கள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். இங்கு தயாராகும் கலயங்கள் மிகவும் உறுதி தன்மையுடன் கலைநயத்துடன் இருப்பதால் ஏராளமான ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வதாக கூறினர்.