நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட திருவிழாவிற்கு ரூ.2.50 லட்சத்தில் மரக்கப்பல் தயார்
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டத் திருவிழாவிற்காக ரூ.2.50 லட்சம் செலவில் மரக்கப்பல் தயார் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
‘திருநெல்வேலி’ எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆனித் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேரான நெல்லையப்பர் கோயில் சுவாமி தேர் 450 டன் எடை கொண்டது. ஆனித் தேரோட்டத்தின் போது சுவாமி தேர், அம்பாள் தேர், விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என 5 தேர் ரதவீதிகளில் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படும். நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தின் போது தேருக்கு முன்பாக மரக்கப்பலில் பீமன் எழுந்தருளி உலா வருவது வழக்கமாக இருந்தது. மரக்கப்பலின் சக்கரங்கள் பழுதாகியதால் கடந்த பல ஆண்டுகளாக மரக்கப்பல் இல்லாமல் தேரோட்டம் மட்டுமே நடந்துவந்தது. மரக்கப்பல் செய்யவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ரூ.2.50 லட்சம் செலவில் மரக்கப்பல் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நெல்லையப்பர் கோயிலில் நடந்து வருகிறது. இதில் அலங்கார பொம்மைகளை பொருத்துவதற்காக பொம்மைகள் செய்யும் பணியில் மர சிற்ப கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஆனித் தேரோட்டத்தின் போது மரக்கப்பல், தேருக்கு முன்பாக வலம் வருவது உறுதியாகியுள்ளது. இதனால் நெல்லையப்பர் பக்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.