பழநியில் தங்கரதம் கட்டணம்: ஹிந்து தமிழர் கட்சி எதிர்ப்பு
பழநி: பழநி முருகன் கோவிலில் தங்கரதம் புறப்பாடு கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதற்கு, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தங்கரதம் புறப்பாட்டிற்கான கட்டணத்தை, 2,000 - 3,000 ரூபாயாக உயர்த்த ஆலோசனை மற்றும் ஆட்சேபனை கருத்துகளை கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குறித்து ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தங்கரதம் புறப்பாட்டில் பெறப்படும் கட்டணத்தை வைத்து, கோவில் நடத்த வேண்டிய நிலை இல்லை. பழநி கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். வசூல் செய்யும் வணிக நிறுவனமாக மாறக்கூடாது. ஏழை பக்தர், முருகனை தங்கரதத்தில் இழுத்து வழிபட வேண்டும் என்ற ஆசையை நிராசையாக்க கோவில் நிர்வாகம் முயற்சி செய்யக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.