இளையாத்தங்குடியில் காஞ்சி மகாப் பெரியவர் சிலை மறுபிரதிஷ்டை
கீழச்சிவல்பட்டி: திருப்புத்தூர் ஒன்றியம் இளையத்தாங்குடி கைலாச விநாயகர் கோயில் ஊரணி வடகரை படித்துறையில் காஞ்சி சங்கர மட 63வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் சிலை மறுபிரதிஷ்டை செய்யப்பட்டது.
இளையாத்தங்குடி கிராமத்திற்கும் காஞ்சிமடத்திற்கும் 128 ஆண்டுகால தொடர்பு உள்ளது. காஞ்சி மடத்தின் 65வது மடாதிபதியாக இருந்த சுதர்சன மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1939 ல் தேசாந்திரப் பயணத்தின் போது இளையாத்தங்குடி கைலாசநாதர் கோயிலில் சில நாட்கள் சிவபூஜைகள் செய்த நிலையில் முக்தியடைந்தார். அவரது நினைவாக கோயிலுக்கு அருகாமையில் வடதிசையில் அதிஷ்டானம் உருவாக்கப்பட்டது. காஞ்சி மடத்தின் தொடர் வழிபாட்டில் உள்ளது. இங்கு வந்த68 வது மடாதிபதி மகா பெரியவர் சந்திர சேகரந்த சரஸ்வதி சுவாமிகளும் ஒண்ணே கால் ஆண்டு இளையாத்தங்குடியில் தங்கி பூஜைகளில் ஈடுபட்டார். அப்போது கைலாசவிநாயகர் கோயில் ஊரணி படித்துறையிலும் பூஜை செய்தார். இதனையடுத்து 2019ல் 68 வது மடாதிபதி மகா பெரியவர் சந்திர சேகரந்த சரஸ்வதி சுவாமிகள் பூஜை செய்த ஊரணி படித்துறையில் அவரது சிலை பிரதிஷ்டை செய்து நித்ய பூஜைகள் நடந்து வருகிறது. ஊரணியில் நீர் பெருகும் போது பூஜைகள் செய்ய இயலாதநிலை உருவானது. இதனையடுத்து காரைக்குடி எஸ்.எல்.என்.நாராயணன் செட்டியார் முயற்சியால் சிலையை படித்துறையின் மேல்பகுதியில் பிரதிஷ்டை செய்ய மடத்தின்அனுமதி கிடைத்தது. இதனையடுத்து படித்துறையின் 3வது படிக்கட்டில் சிறு ஆலயம் உருவாக்கப்பட்டு சிலை மறுபிரதிஷ்டை செய்யப்பட்டது.
இன்று காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி, கடம் புறப்பாடாகி காலை 10:11 மணிக்கு விமான கலசத்திற்கும் தொடர்ந்து பெரியவர் சுந்தரேசர் அய்யர் தலைமையில் அபிஷேகம் நடந்தது. பின்னர் நடந்த தீபாராதனையை கிராமத்தினர் தரிசித்தனர். எஸ்.எல்.என்.நாராயணன் செட்டியார், ரோட்டரி முன்னாள் ஆளுநர் பெரியணன் செட்டியார்,கிராமத்தினர் பங்கேற்றனர்.