வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா 18ம் தேதி துவக்கம்
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா வருகிற, 18ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலின், 30ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா, வருகிற, 18ம் தேதி பூச்சாட்டுடன் துவங்குகிறது. 21ம் தேதி லட்சார்ச்சனையும், 22ல் கிராம சாந்தியும், 23ம் தேதி காலை, 10:00 மணிக்கு கொடியேற்றமும், மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், நடைபெற உள்ளது. 24ம் தேதி பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட உள்ளது. 25ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், காலை,6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 26ம் தேதி காலை மாவிளக்கு பூஜையும், மாலையில் பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 27ம் தேதி இரவு பரிவேட்டையும், வான வேடிக்கையும், 28ல் மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டு நடைபெற உள்ளது. 31ம் தேதி, 108 திருவிளக்கு பூஜையும், ஆகஸ்ட் 1ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவிலின் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் செய்து வருகின்றனர்.