சோமநாத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
காரைக்கால்: காரைக்கால் சுரக்குடி சோமநாத சுவாமி ஆலயம் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சுரக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சோமகலாவள்ளி அம்மன் சமேத சோமநாத சுவாமி ஆலயம். பழமை வாய்ந்த இவ்வாலய கும்பாபிஷேகம் முன்னிட்டு கடந்த 3ம் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. 5ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று 4ம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாகும்பம் நிறைவுபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து வேத மந்திரங்கள் வாத்தியங்கள் முழங்க ஆலய விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ.,சீனியர் எஸ்.பி..மணீஷ் மற்றும் திருப்பணிக்குழு அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.