திருப்பரங்குன்றம் கோயில் பணியாளர்களுக்கு அலைபேசியில் வருகைப் பதிவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணியாளர்களுக்கு ஜூலை 1 முதல் அலைபேசியில் ஆப் மூலம் வருகை பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அலுவலக பணியாளர்கள் காலை 10:00 முதல் மாலை 5:45 மணி வரையிலும், உள்துறை பணியாளர்கள் ஒரு பிரிவினர் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும், மற்றொரு பிரிவினர் இரவு 8:00 முதல் கோயில் நடை சாத்தும் நேரம் வரையிலும், மீண்டும் மறுநாள் அதிகாலை கோயில் நடை திறந்தது முதல் காலை 8:00 மணிவரையிலும் பணியாளர்கள் பணி செய்கின்றனர். அலைபேசியில் வருகை பதிவு: பணியாளர்கள் காலையில் அலுவலகம் வந்ததும் இருப்பிடத்திலிருந்து தங்களது அலைபேசியில் திருக்கோயில் ஆப் மூலம் போட்டோ எடுத்து வருகையை பதிவு செய்கின்றனர். அலுவலகம் சம்பந்தமாக வெளி வேலையாக செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கிருந்து அலைபேசியில் போட்டோ எடுத்து வருகையை பதிவு செய்கின்றனர். இதற்காக பணியாளர்களின் அலைபேசியில் திருக்கோயில் ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி வருகையை பதிவு செய்கின்றனர்.