சேலம்: சேலம், ஆதி பராசக்தி கோவிலுக்குள் நேற்று காலை, திடீரென்று தோன்றிய காலடி தடத்தால், பரபரப்பு ஏற்பட்டது. சேலம், ராமகிருஷ்ணா ரோட்டில், ஆதி பராசக்தி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்குள், நேற்று மதியம், திடீரென்று சிறிய கால் தடம் பதிவானது. கோவிலுக்குள், ஈரத்துடன் வந்த பக்தர்களால் தடம் பதிந்திருக்கலாம், என்று பக்தர்கள் நினைத்தனர். எண்ணெயில் கால் வைத்த பின், நடந்து சென்றதை போல், காலடி தடம் இருந்தது. நீண்ட நேரமாகியும் காலடி தடம் மறையாததால், கோவிலுக்குள் அம்மன் வந்ததால், காலடி தடம் ஏற்பட்டதாக பக்தர்கள் சிலர் கூறினர். இந்த தகவல் வேகமாக பரவியதால், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். மாலை, 4 மணி வரை, பக்தர்கள் கோவிலுக்கு வந்து, காலடி தடத்தை வியப்புடன் பார்த்து சென்றனர். சிலர், கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர். கோவிலுக்குள் திடீரென பதிந்திருந்த காலடி தடத்தால், பரபரப்பு ஏற்பட்டது.