ஆக., 16 முழு ஆடி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் நீரடலாம்
ராமேஸ்வரம்: ஆக., 16 அன்று முழு ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட உகந்தது என புரோகிதர்கள் தெரிவித்தனர்.
ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடி, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுவார்கள். இந்தாண்டு ஆடி 1 (ஜுலை 17), ஆடி 31ல் (ஆக., 16) ஆடி அமாவாசை வருகிறது. இந்த இருநாளில் எந்த அமாவாசையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்து புனித நீராடுவது என்பதில் பக்தர்களிடம் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆக., 16ல் ஆடி முழு அமாவாசை என்பதால் பக்தர்கள், இந்நாளில் பூஜை செய்து நீரடலாம் என ராமேஸ்வரம் புரோகிதர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் புரோகிதர் சாச்சா55, கூறுகையில் : ஆடி 1ல் வரும் அமாவாசையில், ஆனி கடைசி நாளும் சேர்ந்து வருகிறது. மேலும் ஆடியில் இரு திதி நாள்கள் வருவதால், 2வது திதியில் (ஆக., 16) வரும் ஆடி அமாவாசையில் பக்தர்கள் விரதமிருந்து திதி, தர்ப்பணம் பூஜை செய்து புனித நீராடுவது உகந்தது என்றார்.