உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை ஆடித் தபசு திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை ஆடித் தபசு திருவிழா கொடியேற்றம்

சங்­கரன்கோவில்: சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில், ஆடித் தபசு திருவிழா நாளை (21ம் தேதி ) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. முன்னோரு காலத்தில் சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை, பக்தர்களிடையே ஏற்பட்டது. அப்போது பக்தர்கள், கோமதி அம்பாளிடம் முறையிட்டனர். இதனால் சிவன், விஷ்ணு இருவரும் ஒருவரே என்று, பக்தர்களுக்கு விளக்க வேண்டி, கோமதி அம்பாள் ஒற்றைக் காலில் தபசு இருந்தார். அம்பாளின் கோரிக்கையை ஏற்று சங்கரலிங்க சுவாமி தனது உடலின் வலதுபுறத்தை சிவனாகவும், இடதுபுறத்தை விஷ்ணுவாகவும் மாற்றி, சங்கரநாராயண சுவாமியாக காட்சி கொடுத்தார். இந்த அரிய நிகழ்ச்சியே, ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கோயிலில், சங்கரலிங்க சுவாமி மற்றும் சங்கரநாராயண சுவாமிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஆடித்தபசு திருவிழா, நாளை (21ம் தேதி) காலை 6:15 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் கோமதி அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பின்னர், கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் திருநாளான 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 11ம் திருநாளான 31ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தபசு காட்சி நடக்கிறது. அன்று மாலை சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமியாக அம்பாளுக்கு காட்சி கொடுக்கிறார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !