உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியாபட்டி மந்திரிஓடையில் பழமையான வில்வீரன் வளரிவீரன் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

காரியாபட்டி மந்திரிஓடையில் பழமையான வில்வீரன் வளரிவீரன் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

காரியாபட்டி: காரியாபட்டி மந்திரிஓடையில் 400 ஆண்டுகள் பழமையான வில்வீரன், வளரி வீரன் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

காரியாபட்டி மந்திரிஓடையில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வரலாற்று துறை மாணவர்கள் கருப்புசாமி, தர்மராஜா, காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி தமிழ் துறை மாணவர் செல்வகுமார் ஆகியோர் தகவல்படி, பாண்டியநாடு பண்பாட்டு மையத் தொல்லியல் கள ஆய்வாளர்கள் தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் கள மேற்பரப்பாய்வு செய்த போது, 400 ஆண்டுகள் முற்பட்ட நாயக்கர் கால வில்வீரன், வளரிவீரன் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் தெரிவித்ததாவது; வில்வீரன் சிற்பம் போர்களில் ஈடுபட்டு வீரமரணம் அடையும் வீரர்கள், வீரதீர செயல்களில் ஈடுபடும் வீரர்களுக்கு நடுகல் எடுப்பது நமது முன்னோர்கள் கடைப்பிடித்த மரபாகும். அவ்வாறான பண்பாடுகளில் வில்வீரன் நடுகல்லும் ஒன்றாகும். தற்போது நாங்கள் கண்டறிந்த வில்வீரன் நடுகல் சிற்பமானது 4 உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வீரன் இடதுபுறம் சரிந்த கொண்டை உடைய தலைப்பகுதி, மார்பில் ஆபரணங்கள், இடது கையில் வில் பிடித்த படி, முதுகுப்பகுதியில் அம்புரான் கூடும், இடையில் இடைக்கச்சையுடன் நின்றகோளத்தில் கம்பீரமாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இருக்கலாம். வில்வீரன் சிற்பத்திலிருந்து 200 அடி தூரத்தில் வளரிவீரன் நடுகல் சிற்பம் காணப்படுகிறது. இந்த சிற்பம் 4 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி இடது புறம் சரிந்த கொண்டை, மார்பில் ஆபரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கைகளில் வளையல்கள், புஜங்களில் காப்புகள், இடையில் இடைக்கச்சை, அவற்றில் குறுவாளினை சொருகியபடி காலில் வீரக்கழலை அணிந்தபடி சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இடது கரத்தில் வளரியை பிடித்த படி, வலது கரத்தில் மணிகள் கோர்த்த குத்தீட்டியை பிடித்தபடி கம்பீரமான தோற்றத்தில் நின்ற கோளத்தில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !