பரமக்குடி சுந்தரராஜபெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா நேற்று முன்தினம் இரவு அனுக்கை, வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த, இக்கோயிலில் ஆண்டு முழுவதும் மதுரை அழகர் கோயிலை போன்று விழாக்கள் நடப்பது வழக்கம். இங்கு மூலவர் பரமஸ்வாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார் உடன் அருள்பாலிக்கிறார். இதன்படி நேற்று காலை 9:30 மணிக்கு கருட கொடி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னர் சுந்தரராஜ பெருமாள் ஏகாந்த சேவையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடி மரம் அருகில் எழுந்தருளினார். அப்போது வான வேடிக்கைகள் முழங்க காலை 10:15 மணிக்கு கருட கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் வேத மந்திரங்கள் முழங்க பெருமாளுக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை பெருமாள் மோகினியாக அன்ன வாகனத்தில் வீதி உலா வந்தார். இதேபோல் தினமும் காலை, மாலை பெருமாள் சிம்ம, சேஷ, அனுமன், யானை வாகனங்களில் உலா வருவார். ஜூலை 27 இரவு கருட வாகனத்தில் பெருமாள் பரமபதநாதனாக அருள் பாலிக்கிறார். ஜூலை 29 இரவு ஆண்டாள் மாலை மாற்றுதல், மறுநாள் பூப்பல்லக்கில் வலம் வருவார். ஜூலை 31 காலை நவநீத கிருஷ்ணன் சேவை, ஆக., 1 காலை 10:31 மணிக்கு ஆடி தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது. மறுநாள் காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஷ்டிகள் செய்துள்ளனர்.