அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 21 ஆறுகளின் புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடு
தஞ்சாவூர் : அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக, கும்பகோணம் மகாமக குளத்தில் இருந்து நேற்று, 21 ஆறுகளின் புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடு நடந்தது.
அயோத்தில், கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், அடுத்த ஆண்டு, ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தி தினத்தன்று நடைபெறுகிறது. கோவில் கும்பாபிஷேகத்திற்காக நாட்டின், 21 புனித நதிகளிலிருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. அந்த குடங்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, கும்பகோணம் மகாமக குளத்தில் இருந்து, அந்த குடங்கள் புறப்பாடு நடந்தது. இதில், சூரியனார்கோவில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் மாநகராட்சி மேயர் சரவணன் போன்றோர் பங்கேற்றனர்.
புனித நீர் யாத்திரை குழுவின் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி அனுமன் சேனா என்ற அமைப்பின் மாநில பொதுச் செயலர் பாலா கூறியதாவது: கும்பகோணத்தில் இருந்து குடம் புறப்பாடாகி, ராமேஸ்வரம் செல்ல உள்ளது. அங்கு புனித நீர் அடங்கிய குடத்திற்குப் பூஜைகள் செய்யப்பட்டு, ரயில் மூலம் அயோத்திக்கு எடுத்துச் சென்று, ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒப்படைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.