உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடி பகவானுக்கு சோறு அபிஷேகம்: விநோத வழிபாடு!

இடி பகவானுக்கு சோறு அபிஷேகம்: விநோத வழிபாடு!

பெ.நா.பாளையம்: மழை வேண்டி இடி பகவானுக்கு, மோர், தயிர், சோறு கொண்டு அபிஷேகம் செய்து, வினோத வழிபாடு நடந்தது. பருவமழை பொய்த்ததால், கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குளம், குட்டைகள், நீரின்றி வறண்டு போயுள்ளன. மழை பெய்ய வேண்டி, ஆங்காங்கே, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள, வெள்ளக்கிணறு கிராமத்தில், மழைக்காக நேற்று வினோத பூஜை நடைபெற்றது. ஊர் மக்கள் ஒன்று கூடி, துடியலூர் ரோட்டில் உள்ள குமரன் கோவிலில், சிறப்பு பூஜை நடத்தினர். பின், பானையை ஏத்தியபடி வெள்ளக்கிணறுவில் வீடு, வீடாக சென்று அங்குள்ளவர்களிடம் சோறு, தயிர், மோர் ஆகியவற்றை பெற்றனர். அவற்றை, வெள்ளக்கிணறுவில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று, வெள்ளக்கிணறு - சரவணம்பட்டியில் ரோட்டில் உள்ள இடி பகவான் கோவிலுக்கு வந்தனர். தாங்கள் கொண்டு வந்த சோறு, கம்பச்சோறு, தயிர், மோரால், இடி பகவானுக்கு அபிஷேகம் செய்தனர். இந்த வழிபாடு குறித்து பொதுமக்கள் கூறியதாவது: இக்கோவில் பழமையானது. மழையின்றி, எப்போதெல்லாம் வறட்சி ஏற்படுகிறதோ, அப்போது தயிர், மோர், கம்பு சோறு போன்ற குளிர்ந்த பொருட்களை பெற்று வந்து, இடி பகவானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இறைவன் குளிர்ந்தால், மழை பெய்யும் என்பது ஐதீகம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !