உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் தரகர்களிடம் ஏமாற வேண்டாம்: பக்தர்களே உஷார்!

திருமலையில் தரகர்களிடம் ஏமாற வேண்டாம்: பக்தர்களே உஷார்!

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள், தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம், என, திருப்பதி தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி, அசோக்குமார் கூறினார். அவர் கூறியதாவது: ஐதராபாத்தை சேர்ந்த பக்தர்கள், கடந்த மாதம், 24ம் தேதி, திருமலை வந்தனர். வைகுண்டம் இரண்டாவது காம்ப்ளக்ஸ் கவுன்ட்டரில் பணியாற்றும் முனி நிரஞ்சன், தன்னை தேவஸ்தான ஊழியர் என, அவர்களிடம் அறிமுகப்படுத்தி, நித்ய கல்யாண உற்சவ டிக்கெட்டை பெற்றுத் தருவதாக  நம்ப வைத்துள்ளார். இதற்காக, தன் வங்கி கணக்கு எண்ணை கொடுத்து, திருமலை ஆந்திரா வங்கி கிளையில், 11 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி கூறியுள்ளார். அவரது கணக்கில் பணத்தை கட்டிய ஐதராபாத் பக்தர்கள், அவரை தொடர்பு கொண்ட போது, எந்த பதிலும் இல்லை. அதிர்ச்சியடைந்த அவர்கள்,  திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார், முனி நிரஞ்சனை இம்மாதம், 4ம் தேதி கைது செய்தனர். தரகர்கள், பக்தர்களை நம்ப வைத்து, மோசடி செய்ய முயன்றால், விஜிலென்ஸ் அதிகாரியின் இலவச தொலைபேசி, 1800 4254141; திருமலை பாதுகாப்பு அதிகாரி, 09549575955; துணை விஜிலென்ஸ் பாதுகாப்பு அதிகாரி, 09949828995 போன்வற்றில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அசோக்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !