சதுரகிரி மலையில் மீண்டும் காட்டுத்தீ; வனத்துறையினர் விரைவு
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பிடித்துள்ளது. இதனை அணைக்கும் பணியில் சாப்டூர் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் ஆடி மாதம் முதல் அமாவாசை நாளான ஜூலை 17 இரவு மதுரை மாவட்டம் சாப்டூர் வனச்சரகம் பீட் நம்பர் 5 என்ற வனப்பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்தது. இதனை இரண்டு நாட்களாக போராடி வனத்துறையினர் அணைத்தனர். இந்நிலையில் இன்று மாலை 5:30 மணிக்கு மேல், சாப்டூர் வனச்சரகம் பீட்டு நம்பர் 5 ஊஞ்சக்கல் என்ற இடத்தில் காட்டு தீ பற்றி எரிந்தது. இதனை பல கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால், வத்திராயிருப்பு தணிப்பாறை செல்லும் ரோட்டில் இருந்து பார்க்க முடிந்தது. தகவலறிந்த சாப்டூர் வனச்சரகர் செல்வமணி தலைமையில் ஏராளமான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் போதிய மழை இல்லாததால், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து மலை மிகவும் வறண்டநிலையில் காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 9:00 மணி முதல் வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அக்னி நட்சத்திரத்தை விட அதிகமாக இருந்தது. அதே நேரம் ஆடி மாத காற்றும் வீசியது. இதனால் காய்ந்து கிடந்த மலைப்பகுதியில் தீப்பிடித்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.