பரமக்குடி சுந்தரராஜபெருமாள் கோயிலில் ஆடி தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில், ஜூலை 24 கருட கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. அன்று தொடங்கி தினமும் பெருமாள் அன்னம், சிம்மம், சேஷ, கருடன், அனுமன், யானை வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் அருள் பாலித்தார். இன்று காலை 10:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தயாருடன் சுந்தரராஜ பெருமாள் ஏகாந்த சேவையில் அலங்காரமாகினார். பின்னர் காலை 11:00 மணிக்கு தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தன. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் ரத வீதிகளில் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். சுவாமிக்கு தேங்காய் உடைத்தும், பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கியும் சுவாமியை ஏராளமானோர் தரிசித்தனர். தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பின்னர் திருக்கோயிலை அடைந்த பெருமாளுக்கு நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.