உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கடல் பாசிகள் : துர்நாற்றம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கடல் பாசிகள் : துர்நாற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான கடல் பாசிகள் ஒதுங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் அருவெருப்புடன் நீராடிச் சென்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். புனித தீர்த்தமான அக்னி தீர்த்த கடற்கரையில் தினமும் குவியும் பக்தர்கள் வீசிய கழிவு துணிகள், குப்பைகளை ராமேஸ்வரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி சுகாதாரம் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் ஏராளமான கடல் பாசிகள் அக்னி தீர்த்த கரையில் ஒதுங்கியது. இதனை அகற்றி சுகாதாரம் பராமரிக்காமல் விட்டதால், இப்பாசிகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தபடி அருவெருப்புடன் நீராடி சென்றனர். இப்பாசிகளை அகற்றி புனித அக்னி தீர்த்த கரையில் சுகாதாரம் பராமரிக்க நகராட்சிக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !