பூம்புகார் காவிரி சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை
மயிலாடுதுறை: சீர்காழி அருகே பூம்புகாரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் காவிரி சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து, புனித நீராடி வழிபாடு செய்தனர். காவிரில் நீர் வரத்து இல்லாததால் கடலில் குளித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்குமிடம் சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படும். காவிரிசங்கமத்தில் புனித நீராடுவது பொதுமக்கள் வழக்கம். ஆடி மற்றும் தை அமாவாசையன்று காவிரி சங்கமத்தில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால், முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். அதன்படி ஆடி அமாவாசையான இன்று பூம்புகார் காவிரி சங்கமத்தில் தமிழகம் முழுவதும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பொதுமக்கள் பூம்புகார் காவிரி சங்கமத்தில் குவிந்துள்ளனர். முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து காய்கறிகள், கீரைவகைகள், பச்சரிசி, எள் தர்ப்பணம் கொடுத்து காவிரி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.பொதுமக்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, பொறையார் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. காவிரியில் நீர் பரப்பில்லாததால் ஆபத்தான முறையில் கடலில் குளித்து வருகின்றனர். பூம்புகார் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.