உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமி என்பது பெண் சக்தியின் அடையாளம்; நிலவில் விக்ரம் லேண்டர் கால்பதித்த பகுதியை சிவசக்தி என்று அழைப்போம்.. பிரதமர் மோடி

பூமி என்பது பெண் சக்தியின் அடையாளம்; நிலவில் விக்ரம் லேண்டர் கால்பதித்த பகுதியை சிவசக்தி என்று அழைப்போம்.. பிரதமர் மோடி

பெங்களூரு: நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை சிவ சக்தி என்று அழைப்போம். சந்திரயான் -3 திட்டத்தில் பெண்கள் பங்களிப்பு அதிகம் உள்ளதால், சிவ சக்தி என்று அழைப்பதே சால சிறந்ததாகும் என பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திந்து பாராட்டிய பின், நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார்.

மறக்க முடியாது: சந்திரயான்-3 வெற்றிக்கு பாடுப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டினார். அப்போது பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: தென் ஆப்ரிக்கா சென்றிருந்தாலும் எனது மனம் முழுவுதும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே இருந்தது. இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவை தொட்ட தருணம் மறக்க முடியாது.

சாதித்துள்ளோம்: இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவை ஆய்வு செய்ய புதிய வாசல்கள் திறந்துள்ளது. உலக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா தலைமையேற்கும். இந்திய விஞ்ஞானிகளை உலகமே வியந்து பார்க்கிறது. நிலவில் யாரும் செய்யாத சாதனையை நாம் அனைவரும் இணைந்து போராடி சாதித்துள்ளோம். சுதந்திர இந்தியாவின் அடையாளமான அசோக சின்னம் நிலவில் பதிக்கப்பட்டு வருகிறது.

சிவசக்தி: நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை சிவ சக்தி என்று அழைப்போம். இமயம் முதல் குமரி வரை இந்தியாவை இணைக்கும் தாரக மந்திரமாக சிவ சக்தி உள்ளது. பூமி என்பது பெண் சக்தியின் அடையளமாக திகழ்கிறது. சந்திரயான் -3 திட்டத்தில் பெண்கள் பங்களிப்பு அதிகம் உள்ளதால், சிவ சக்தி என்று அழைப்பதே சால சிறந்ததாகும்.

நிரூபித்துள்ளோம்: சந்திரயான் 3 திட்டம் வெற்றியை கண்டு எனது மனம் பூரித்துப்போய் இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். நிலவின் ரகசியங்களை கண்டறிவோம். விஞ்ஞானிகளின் கடின உழைப்பிற்கு நான் தலைவணங்குகிறேன். நமது நாட்டின் பெருமையை உலகிற்கே நாம் நிரூபித்துள்ளோம்.

தேசிய விண்வெளி தினம்: நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தடம் பதித்த ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடுவோம். விஞ்ஞானம், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விண்வெளி தொழில்நுட்பம் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வானியல் ஆராய்ச்சியில் இந்தியா மிக நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.

திரங்கா( மூவர்ணக்கொடி): இந்திய இளைஞர்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தட்டி எழுப்பி உள்ளார்கள். 2019ல் சந்திரயான்-2 நிலவில் தனது தடத்தை பதித்த இடம் திரங்கா( மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டவே திரங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !