ஜி - 20 மாநாட்டில் உலக தலைவர்களை கவர்ந்த தமிழக நடராஜர் சிலை
புதுடில்லி: டெல்லியில் ஜி - 20 மாநாடு நடைபெற்று வரும் பாரத் மண்டப வளாகத்தில் உள்ள 27 அடி உயர நடராஜர் சிலை உலக தலைவர்களை கவர்ந்துள்ளது.நம் நாட்டில் முதன்முறையாக நடத்தப்படும், ஜி - 20 மாநாடு வெற்றிகரமாக நடந்து வருகிறது. உலகளாவிய தெற்கில் நிலவும் பிரச்னைகள், உக்ரைன் போரின் விளைவுகள், இருண்ட பொருளாதார சூழ்நிலை மற்றும் துண்டு துண்டாக கிடக்கும் புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற சில சிக்கலான சவால்களுக்கு விடை தேடி நடத்தப்படும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, உலக தலைவர்கள் பலர் ஆர்வமுடன் புதுடில்லியில் குவிந்துள்ளனர். இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரபேியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள், ஜி - 20 அமைப்பில் இடம் பெற்றுள்ளன. மாநாடு நடக்கும் பிரகதி மைதானில் உள்ள பாரத் மண்டபம் நுழைவு வாயிலில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பிரமாண்ட நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நடராஜர் சிலை, 27 அடி உயரம், 18 ஆயிரம் கிலோ எடையுடன், அஷ்டதாதுக்கள் எனப்படும் எட்டு வேதிப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப் பெரும் சிலையாகும். தமிழகத்தின் சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினர் இதை, ஏழு மாதங்களுக்குள் உருவாக்கியுள்ளனர். சோழர்கள் காலத்தில் இருந்து, இவரது குடும்பத்தைச் சேர்ந்த, 37 தலைமுறையினர், சிலைகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அண்டத்தின் ஆற்றல், புதுமை, சக்தி ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் இந்த சிலை, ஜி - 20 மாநாட்டின் முக்கிய ஈர்ப்பு விசையாக இருக்கிறது. இச்சிலை ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தலைமையகத்திலும் 17 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:பாரத் மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது.இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.