கோவில் கும்பாபிஷேகங்கள் விரைவில் புத்தகமாக வெளியீடு
சென்னை: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 1,030 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும், என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 1,000வது கோவில் கும்பாபிஷேக விழா, சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று காலை நடந்தது. இதில், அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ., கருணாநிதி, கவுமார மடம் சிரவை ஆதீனம், கோவை குமரகுருபர சாமிகள், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குருமகா சன்னிதானம் தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அத்துடன், தமிழகம் முழுதும் மேலும், 30 கோவில்களிலும் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதுகுறித்து, அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில், 18 ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணிகளை முடித்து, 400 ஆண்டுகளுக்கு பின், அக்கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
புகைப்படங்கள்; கடந்த நிதியாண்டியில், 140 கோடி ரூபாயில், 1,000 ஆண்டுகள் பழமையான, 113 கோவில்களிலும்; இந்த நிதியாண்டில், 160 கோடி ரூபாயில், 84 திருக்கோவில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சென்னை காசி விஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் அனைத்தும், இந்த ஆட்சியில் தான் நடந்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 1,030 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.