உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனாதன தர்மம் சர்ச்சையின் தாக்கம்; ஆன்மிக புத்தக விற்பனை அதிகரிப்பு.. இளைய தலைமுறையினர் ஆர்வம்

சனாதன தர்மம் சர்ச்சையின் தாக்கம்; ஆன்மிக புத்தக விற்பனை அதிகரிப்பு.. இளைய தலைமுறையினர் ஆர்வம்

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை எழுந்ததன் எதிரொலியாக, ஆன்மிகம் சார்ந்த நுால்களின் விற்பனை அதிகரித்துஉள்ளது. பொதுவாக ஆன்மிகம் உள்ளிட்ட சில விஷயங்களை, கூகுள் மற்றும் யு டியூப் போன்றவற்றில் தேடினாலும் கிடைக்காது. இந்நிலையில், சமீபத்தில் சனாதன தர்மம் குறித்து, தமிழக அமைச்சர் உதயநிதி பேசியது, தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிஉள்ளது. மற்றொரு புறத்தில், சனாதன தர்மம் குறித்த விவாதங்களும், நாடு முழுதும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இதனால் வழக்கம்போல, யு டியூப், கூகுள் போன்ற தேடுபொறிகளில் தேடுவோரை விட, புத்தகங்களைத் தேடுவோர் அதிகரித்துள்ளனர்.

இதுகுறித்து, பதிப்பகம் நடத்தும் சிலர் கூறியதாவது: இன்றைய இளைஞர்கள் மத்தியில் தேடல் அதிகமாகவுள்ளது. கடவுள் இருக்கிறார், இல்லை என்ற தர்க்கத்தை தாண்டி, கடவுள் என்ற கற்பிதம், மனிதர்களை நல்வழிப்படுத்த உதவுகிறது என்பதை பலரும் ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளனர். காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தவறான தகவல்களைப் பரப்புவது, சர்வ சாதாரணமாகி விட்டது. அதனால் உண்மையை அறிய, இளைய தலைமுறையினர் புத்தகங்களைத் தேடத் துவங்கியுள்ளனர்; இது ஒரு நல்ல மாற்றம். அமைச்சர் உதயநிதியின் சர்ச்சை பேச்சுக்குப்பின், ஆன்மிகம் சார்ந்த புத்தகங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட, பகவத் கீதை, தேவாரம், திருவாசகம் அதிகமாக விற்கப்படுகின்றன; முக்கியமாக, திருமறை நுாலைத் தேடி வருவோர் அதிகமாகவுள்ளனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். இத்தகைய அரசியல் சர்ச்சைகளால், பத்திரிகை படிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. -நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !