உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்

பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6ம் நாளான நேற்று கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது.
கற்பக விநாயகர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா செப்.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் வெள்ளி கேடகத்தில் உற்ஸவர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. நேற்று மாலை 4:30 மணிக்கு மூலவர் சன்னதியில் மூலவர் பாதத்தில்தந்தம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் துவங்கின. பின்னர் மாலை 5:30 மணிக்கு பூஜை நிறைவடைந்து கிழக்கு கோபுர மண்டபத்தில் வெள்ளிக் கேடகத்தில் உற்ஸவ விநாயகர் யானை வாகனத்தில் எழுந்தருளினார். அவரிடம் மூலவர் சன்னதியிலிருந்து பூஜிக்கப்பட்ட தந்தம் வழங்கப்பட்டது. பின்னர் யானை வாகனத்தில் உற்ஸவர் புறப்பாடாகி யானை முகத்துடன் கிழக்கு கோபுர வாசலில் உலாவிக் கொண்டிருந்த கஜமுக சூரனை எதிர் கொண்டார். தொடர்ந்து சூரனின் தலையை வதம் செய்ய வேறு தலைகளை மாற்றிக் கொண்ட சூரனை எதிர் கொண்டார் உற்ஸவர். கோயில் குளத்தின் வடக்குபடித்துறை அருகே சூரனை தந்தத்தால் மும்முறை கழுத்தில் குத்தி தலையை கொய்தார். செப்.,18 காலை சுவாமி தேருக்கு எழுந்தருளலும், மாலை தேர் வடம் பிடித்தலும் நடைபெறும். அன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். செப்.,19 காலை கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும். மதியம் 2:00 மணிக்கு மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !