உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருமுடி கட்டுடன் சபரிமலை வந்த கிறிஸ்தவ பாதிரியார்; 41 நாட்கள் விரதம் இருந்து தரிசனம்

இருமுடி கட்டுடன் சபரிமலை வந்த கிறிஸ்தவ பாதிரியார்; 41 நாட்கள் விரதம் இருந்து தரிசனம்

சபரிமலை: 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டுடன் கிறிஸ்தவ பாதிரியார் சபரிமலை வந்து ஐயப்பனை தரிசனம் செய்தார்.

திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகே உச்சக்கடையைச் சேர்ந்தவர் மனோஜ் 50. ஆங்கிலிக்கன் சபை பாதிரியார். தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். பிற மதங்கள் பற்றி தெரிந்து கொள்வதன் ஒரு பகுதியாக சபரிமலை செல்ல இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்காக மாலை அணிந்து கடந்த மாதம் விரதம் இருக்கத் தொடங்கினார். இதற்கு ஆங்கிலிக்கன் சபை எதிர்ப்பு தெரிவித்து அவர் திருப்பலி உள்ளிட்ட சடங்குகள் நடத்த தடை விதித்தது. மேலும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டையும் திரும்ப பெற்றது. எனினும் சபரிமலை செல்வதில் உறுதியாக இருந்த மனோஜ், நேற்று முன்தினம் இருமுடி கட்டுடன் சபரிமலை வந்தார்.18 படிகளில் ஏறி ஐயப்பனின் ஸ்ரீ கோயிலில் முன்பு நீண்ட நேரம் நின்று தரிசனம் நடத்தினார். அவருக்கு தேவசம்போர்டு வரவேற்பு அளித்தது. சபரிமலை மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி மாளிகைபுரம் மேல் சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் மனோஜுக்கு பொன்னாடை அணிவித்தனர். இது பற்றி கருத்து தெரிவித்த மனோஜ், சபரிமலை பயணம் மனதுக்கு இனிமையாக இருந்ததாகவும், உள்ளே இருக்கும் தெய்வத்தை மனதாலும் உடலாலும் தரிசனம் செய்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவமாக உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !