குன்றத்துார் முருகன் கோவிலில் 1969ல் நடந்த சூரசம்ஹாரம்; 55 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடத்த முடிவு
குன்றத்துார், குன்றத்துார் முருகன் கோவில், 55 ஆண்டுகளுக்கு பின், சூரசம்ஹார விழா நடத்த, அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. குன்றத்துாரில் மலையின் மேற்கு பகுதியில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வள்ளி - தெய்வானையுடன் இருக்கும் முருகனை வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட அறங்காவலர் குழுவில், இக்கோவிலில், 55 ஆண்டுக்கு பின் சூரசம்ஹார விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: குன்றத்துார் முருகன் கோவிலில், அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று வரும் நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படாமல் இருந்து வந்தது. கடைசியாக, 1969ல் சூரசம்ஹார விழா நடந்தது. அதன் பின், பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு முதல் மீண்டும் சூரசம்ஹாரம் நடத்துவதற்கு, அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் நவ., மாதம் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது, அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.