உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆண்டவர் சக்தி கொலு; கருமாரியாக அருள்பாலித்த அம்பாள்

வடபழனி ஆண்டவர் சக்தி கொலு; கருமாரியாக அருள்பாலித்த அம்பாள்

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில்,சக்தி கொலு விழாவின் ஆறாம் நாளான நேற்று, கருமாரியம்மன் அலங்காரத்தில், அம்பாள் அருள்பாலித்தார். வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பாளுக்கு தினசரி, சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. விழாவின் ஆறாம் நாளான நேற்று, அம்பாள் கருமாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, 108க்கும் மேற்பட்ட மகளிர் இணைந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். அதைத் தொடர்ந்து வேத பாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினரின் கொலு பாட்டு நடந்தது. மேலும், தமிழக இசை கவின் பல்கலைக் கழக முதுகலை மாணவ, மாணவியரின் கர்நாடக இசைக் கச்சேரியும் நடந்தது. அதைத் தொடர்ந்து, டாக்டர் கணேஷின் நாம சங்கீர்த்தனம் நடந்தது.

வாகனங்களால் அவதி; முகூர்த்த நாளை முன்னிட்டு, வடபழனி ஆண்டவர் கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களில் நடந்த திருமணத்தில் பங்கேற்க வந்தவர்களின் வாகனங்கள், மாடவீதிகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டன. இதனால், அப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு வழியின்றி தவித்தனர். சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. முகூர்த்த நாட்களில் இக்கோவிலில், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கும். இந்நிலையில், கோவில் மாடவீதிகளில் வீடுகளை திருமண மண்டபங்களாக பலர் மாற்றியுள்ளனர். அங்கும் திருமணங்கள் நடக்கும். திருமணத்திற்கு வருபவர்கள் தங்களின் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மாடவீதிகள், குளக்கரைகளை சுற்றி நிறுத்தி விடுகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, கோவிலைச் சுற்றி வசிப்பவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, பாதிக்கப்படும் பகுதி மக்கள் கூறியதாவது: வடபழனி ஆண்டவர் கோவிலைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு முகூர்த்த நாள் என்றால் அலர்ஜி தான். கோவில், மாடவீதிகளில் உள்ள மண்டபங்களில் திருமணம் நடத்துபவர்கள், தங்களின் வாகனங்களை இஷ்டத்திற்கு காலி இடத்தில் விட்டுச் செல்கின்றனர். இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் தங்களின் வாகனங்களை வீட்டில் இருந்து வெளியே எடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. வயதான முதியவர்கள் உடல் நிலை பாதித்தால், ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியவில்லை. அவர்களை கட்டிலில் வைத்து துாக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை தான் உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு சென்னை மாநகராட்சி, போக்குவரத்து காவல் துறை, கோவில் நிர்வாகம் ஆகியவை இணைந்து ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !