உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா துவக்கம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா துவக்கம்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் நடந்­தது. பின்னர் கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கோமதி அம்பாள் சன்னதி முன் உள்ள தங்க கொடி மரத்தில் காலை 6.40 மணியளவில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், பட்டு துணி, தர்ப்பை புல் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை பாடினர். சிறப்பு தீபாராதனையான சோடச தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் 11ம் திருநாளான நவம்பர் 8ம் தேதி அம்பாள் கீழ ரத வீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்­தருளுகிறார்.  பின்னர் மாலை சங்கரலிங்கசுவாமி கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 10 மணி அளவில் கோயிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி சன்னதி முன் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 12ம் திருநாளான 9ம் தேதி இரவு பட்டினப்பிரவேசம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !