உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்கடல் சங்கமத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆராட்டு

முக்கடல் சங்கமத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆராட்டு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. 11 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்ககவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.  மாலை 4 மணிக்கு கோவில் மேல்சாந்தி மேளதாளத்துடன் தனிப்படகில் சென்று விவேகானந்தர் பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றினார். இதில் எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கோவில் மேலாளர் ஆனந்த், அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர்கள் தாமரை தினேஷ், ஜெஸீம், முத்து குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. 10 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வடக்கு வாசல் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்தார். அதன் பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !