உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மயிலாடுதுறை ; தரங்கம்பாடி அருகே புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமிஅம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. தருமை ஆதீனம் பங்கேற்றார்.

கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமை தோறும், சிவாலயங்களில் சோமவாரம் கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தினத்தில், சங்குகளில் புனித நீர் நிரப்பி, அதன் மூலம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது நன்மை பயக்கும் என்பது ஐதீகமாகும்.  கார்த்திகை மாதம்  திங்கட்கிழமை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை, தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் புகழ்பெற்ற  அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 1008 சங்குகளைக்கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய சங்குகளில்  சிவாச்சாரியார்கள்  வேத மந்திரங்கள் முழங்க , மேளத்தாளத்துடன் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து, பின்னர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம்  நடைபெற்றது.   தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சோடச தீபாராதனை, மகாதீபாரதனை  நடைபெற்றது. இதில்  தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா காட்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !