இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த சிவலிங்கத்திற்கு 1008 சங்காபிஷேகம்
மயிலாடுதுறை : இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அடர்ந்த வனமாக இருந்த பகுதியில் இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து உயர்ந்த வாசனை திரவியமான புனுகினை சாத்தி சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்தான். தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் இதனை அறிந்து காட்டை சீர்திருத்தி கோயிலை அமைத்தான் என்றும் வரலாறு தெரிவிக்கின்றது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தின் இரண்டாவது திங்கள்கிழமையான நேற்று சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பூஜிக்கப்பட்ட காவிரி புனித நீர் 1008 சங்குகளில் நிரப்பப்பட்டு சிவன் மற்றும் அம்பாளுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.