உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜனவரி 22ல் அயோத்தி கோவில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை; 600 அறைகள் தயார்.. இறுதி கட்ட பணிகள் தீவிரம்

ஜனவரி 22ல் அயோத்தி கோவில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை; 600 அறைகள் தயார்.. இறுதி கட்ட பணிகள் தீவிரம்

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக., 5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. கோவிலின் கருவறையில் ராமர் சிலையை, வரும் ஜனவரி 22ம் தேதி நண்பகல் மற்றும் மதியம் 12.45 மணிக்கு இடையே நிறுவுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 4 ஆயிரம் குருமார்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

சிலை பிரதிஷ்டைக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஜனவரி 15க்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் ஜனவரி 16ல் பிராண பிரதிஷ்டை பூஜை தொடங்கி தொடர்ந்து 22ம் தேதி வரை நடைபெறும். பாரம்பரியத்தின்படி, ஜனவரி 24ல் முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்தப்படும் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொது செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.  விருந்தினர்கள் தங்குவதற்காக அயோத்தியில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 600 அறைகள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. ஜனவரி 23ம் தேதி முதல் ராமரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !