சபரிமலை ஐயப்பன் கோயில் அருகில் விமான நிலையம்; நிலம் கையகப்படுத்த கேரள அரசு அனுமதி
கம்பம்; சபரிமலை கிரீன்பீல்டு விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான 2570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு முறைப்படி அனுமதி வழங்கியது.
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சின், கோழிக்கோடு போன்ற இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலிற்கு அருகில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி வழங்கியது. இருந்தபோதும் விமான நிலையம் அமைவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவது, அதற்கு முன்னதாக சாத்தியக்கூறுகள் பற்றிய நிபுணர் குழுவின் ஆய்வு, தொடர்ந்து இதனால் ஏற்படும் சமூக மாற்றங்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, நிபுணர் குழு அறிக்கையை அரசிடம் வழங்கியது. அதை தொடர்ந்து விமான நிலையம் அமையவுள்ள எருமேலி, மணிமாலா கிராமங்களை சுற்றி 2570 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துவக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. நிபுணர் குழு ஆக . 22 ல்
தனது பரிந்துரைகளை வழங்கி உள்ளது. ஆக, 2024 க்குள் நில ஆர்ஜிதம் செய்வதற்கான இறுதி நோட்டிபிகேசன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நில உரிமையாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, நிலம் சர்வே பண்ணும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் தேனி மாவட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். கம்பத்தில் இருந்து எருமேலி 100 கி.மீ. தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அளவில் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரவிரும்பும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்கின்றனர்.