ஈஷாவில் யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு, சப்தரிஷி ஆரத்தி நடந்தது.
சப்தரிஷி ஆரத்தி என்பது சிவன், தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளைப்பெற கற்று கொடுத்த சக்தி வாய்ந்த ஆன்மீக செயல்முறை. வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில், பல நூறு ஆண்டுகளாக சப்தரிஷி ஆரத்தி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை ஈஷாவில், குளிர்கால கதிர் திருப்ப நாளான நேற்று சப்தரிஷி ஆரத்தி விமர்சையாக நடந்தது. இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வந்து, ஆதியோகியின் முன் உள்ள யோகேஸ்வர லிங்கத்தை சுற்றி அமர்ந்து, சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து ஆரத்தி செயல்முறையை துவக்கினர். தொடர்ந்து, தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன், உபாசகர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை, அங்கு சக்தி வாய்ந்த சூழலை உருவாக்கியது. மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை ஆரத்தி செயல்முறை நடந்தது. அதன்பின், ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தையும் நடந்தது. இந்தாண்டு சயன ஆரத்தியை, காசி உபாசகர்களுடன் முதன்முறையாக ஈஷா பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்களும் சேர்ந்து நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.