உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதிகளில் வணிக நடவடிக்கை கூடாது

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதிகளில் வணிக நடவடிக்கை கூடாது

மதுரை : பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதிகளில் வாகனங்களை நுழைய விடாமல் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும். வணிக நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையடிவாரத்தில் கிரி வீதிகள் உள்ளன. இங்கு ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட உயர் நீதிமன்றத்தில் மனு செய்தேன். அகற்ற 2018ல் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாததால் அப்போதைய கலெக்டர் வினய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஜன.,3ல் விசாரணையின்போது தமிழக அரசு தரப்பு,கிரி வீதிகளில் தற்காலிக ஆக்கிரமிப்புகள் ஜன.,5ல் அகற்றப்படும், என தெரிவித்தது.

நீதிபதிகள்: ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. அவர் ஜன.,9ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தர விட்டனர். நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.நீதிபதி (ஓய்வு) பாரதிதாசன் தரப்பில், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றிலும் பிளாஸ்டிக், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும், என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அரசு தரப்பு: ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீண்டும் ஏற்படாதவாறு தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது. 300 கடைகளில் 160 கடைகள் அகற்றப்பட்டன. மற்றவை பட்டா நிலத்தில் உள்ளன. சர்வே செய்து உரிய நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள்: நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் இவ்விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தரப்பில் தவறிவிட்டனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும். பழநி நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல் தெரிய வருகிறது. இது ஆக்கிரமிப்பாளர்களை மறைமுகமாக ஊக்குவிப்பதுபோல் உள்ளது. நிரந்தர கட்டுமான ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து 10 நாட்களில் அகற்ற வேண்டும். கிரி வீதிகளில் வாகனங்களை நுழையவிடக் கூடாது. அங்கு நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் சோதனைச் சாவடி, தற்காலிக தடுப்புகள் அமைக்க வேண்டும். மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். வணிக நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டு ஜன.,23க்கு ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !